வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்
வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் மேலும் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியதாக சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது அவசியமானால் அதற்கான கொள்கைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் தவறை சரி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்திருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.