கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தற்போது காணப்படுவதுடன், 03 மாதங்களில் இல்லாத அதிகூடிய பெறுமதிகள் இன்று பதிவானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் தன்னார்வ உற்பத்தி குறைப்பை இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பதற்கான வாய்ப்பு மற்றும் உலகளவிலான எண்ணெய் விநியோகம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டதே எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பிரன்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 84.54 டொலர்களாக பதிவாகியுள்ள அதேவேளை, அமெரிக்க ட,பிள்யூடி,ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.25 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எண்ணெய் விலை கடந்த 5 வாரங்களாக வாராந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டுப்படுத்தப்பட்ட உலகளாவிய விநியோகத்திற்கு மேலதிகமாக, எண்ணெய் விலை உயர்வை பாதித்த மற்றொரு காரணியாக, அமெரிக்க மத்திய வங்கி அல்லது மத்திய ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தாது என்ற நம்பிக்கையாகும்.
மேலும், எண்ணெய் விலை மேலும் உயரும் போக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை தானாக முன்வந்து குறைத்துள்ளது, மேலும் ஒபெக் உடன் இணைந்து உற்பத்தி குறைப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
உற்பத்தி குறைப்பு ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
சவூதி அரேபியாவின் உற்பத்தி குறைப்பு மற்றும் உலகளாவிய தேவையின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக ஜூன் நடுப்பகுதியில் இருந்து உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இது ஜூலை மாதத்தில் ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு டிசம்பரில் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 86 டொலராகவும், 2024 இரண்டாம் காலாண்டில் 93 டொலராகவும் உயரும் என்று கோல்ட்மேன் செக்ஷ் முதலீட்டு வங்கிக் குழு கணித்துள்ளது.