கொழும்பு நகரில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
கொழும்பை அழகிய தூய்மையான நகரமாக மாற்றும் செயற்திட்டம், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவின் மேற்பார்வையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த கொழும்பை தூய்மையான நகரமாக பேணுவதற்கான பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த வாரம் கொழும்பு நகர சபை பிரதிநிதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து சாகல ரத்நாயக்க இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
கொழும்பை தூய்மையான நகரமாகவும் அழகிய நகரமாகவும் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சாகல ரத்நாயக்க இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நகர்ப்புற பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளை தூய்மையான மற்றும் அழகான இடங்களாக வைத்திருக்குமாறும் அத்துடன் கொழும்பு நகர எல்லையில் உள்ள பேரே ஏரி உட்பட கால்வாய்களை சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் வாரத்தில் இந்தப் பணியை எப்படிச் செய்வது என்று திட்டமிட்டு, இரண்டாவது வாரத்தில் தேவையான வசதிகளை பெற்றுத் தருமாறும் மூன்றாவது வாரத்தில் தேவையான பணிகளைத் தொடங்குமாறும் சாகல ரத்நாயக்க குழுவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.