செப்டெம்பரில் ஆரம்பமாகும் சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“செப்டம்பர் 11 முதல் 19 வரை 08 நாட்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு உள்ளது.மத்திய வங்கி, நிதியமைச்சகம் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் அடங்கிய மீளாய்வாக இது அமையும்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் 09 முன் ஒப்பந்தங்களை நாங்கள் செய்துள்ளோம்.நாங்கள் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
2.9 பில்லியன் டொலர்களுக்கு இந்த பூர்வாங்க ஒப்பந்தங்களை செய்தோம்.
இது 2027 வரை 08 தவணைகளில் பெறப்படும். இப்போது முதல் தவணை கிடைத்துள்ளது.
இரண்டாவது தவணை கிட்டத்தட்ட 350 மில்லியன் டொலர்கள் ஆகும்.செப்டம்பரில் பரிசீலனைக்குப் பிறகு அதைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.