கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள சகல நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்க தீர்மானம்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சகல பாரியளவான நிர்மாணப் பணிகளையும் மீள ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ளவற்றில் முன்னுரிமையின் அடிப்படையில் மீள ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்த தெரிவித்தார்.
கொழும்பு நகரில் மாத்திரம் 10 வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, பாரிய வாகன நிறுத்துமிடங்களின் நிர்மாணப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.
அதற்காக முதலீடு செய்துள்ள மற்றும் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து நிர்மானப் பணிகளையும் மீள ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாவிற்கு நிகராக டொலரின் பெறுமதி வலுவடைந்தமை மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.