News

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்!

அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (25) காலை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

2035 ஆம் ஆண்டளவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையின் வருமானத்தின் ஊடாக இலங்கையின் நிதிப் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு பெற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) முற்பகல் அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

அந்த சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர், அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார்.

அதன்பின், அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

அருகம்பே கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்கையில் அங்குள்ள மீன்பிடித் துறைமுகத்தை , தேவையான வசதிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி வீரசிங்க ஜனாதிபதியிடம் முன்வைத்தார். அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி , இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இங்கு சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வியாபார ஸ்தலங்களுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இதற்குத் தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வர்த்தக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அருகம்பே பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண உத்தேச கெடஓயா குடிநீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய இன்னும் சில வருடங்கள் செல்லும் என்பதால், கடற்படையின் உதவியுடன் தற்போதுள்ள சிறிய நீர் மூலங்களுக்கு மீள்சுழற்சி செய்யும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுவது குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கூறியதாவது:

”கடந்த ஆண்டு நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாக நாம் கடனாளி நாடாக மாறினோம். அரசாங்கம் முன்னெடுத்துள்ள சரியான வேலைத்திட்டத்தினால் இந்த வருடம் நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டாலும் அந்தக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், நாட்டை முன்னேற்றுவதற்கு அந்நியச் செலாவணி அவசியம். எனவே, வர்த்தக நிலுவையை நமக்குச் சாதகமாகப் பராமரிக்காவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் கடன் அதிகரித்து மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதை தவிர்ப்பதற்காக, புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். கிழக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்துள்ளது.

மகாவலி திட்டத்தின் இடது கரையிலுள்ள காணிகளில் ஒரு பகுதியை உள்ளடக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்தும்போது, சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயமும் உருவாக்கப்பட உள்ளது.

சுற்றுலாத்துறையை முன்னேற்றும் அதேவேளை, விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துடன் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். இப்பகுதியில் மிகவும் வறிய மக்கள் வசிக்கின்றனர். அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடித் துறையை நவீனமயமாக்கலைப் போன்றே, விவசாய நவீனமயமாக்கலும் மேற்கொள்ளப்பட வேண்டும். நெல் பயிற்செய்கையின் ஊடாக ஒரு ஹெக்டெயாரில் இருந்து குறைந்தது 07, 08 மெட்ரிக் டொன் அறுவடையாவது பெற வேண்டும். கால்நடை வளர்ப்பு தொடர்பாகவும் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் பத்தாண்டுகளில், இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாகவும், அதன் பிறகு ஒரு கோடியாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். 2035 ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத்துறையிலிருந்து கிடைக்கும் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அவர்களின் பங்களிப்பு குறித்து நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கமைய வருடாந்தம் இப்பிரதேசத்திற்கு குறைந்த பட்சம் 10-20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளையாவது கொண்டுவர வேண்டும். ஒரு சுற்றுலாப் பயணி தினமும் 300 அல்லது 500 டொலர்கள் செலவு செய்யும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அது தொடர்பான திட்டங்களை கிழக்கு மகாணத்தில் இருந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஒரு வித்தியாசமான சுற்றுலாத் துறை உள்ளது. ஒரு பகுதியினர் இந்த மாகாணங்களுக்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள நீர்ச்சறுக்கு போன்ற விளையாட்டுகளை இங்கு ஊக்குவிக்க வேண்டும். இப்பகுதியை சுற்றுலா வலயமாக மாற்ற வேண்டும்.

மேலும், இந்த நகர மற்றும் கிராமத்தின்அபிவிருத்திக்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுலா வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கையையும் ஒருபோதும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அத்துடன் அம்பாறை பஸ் நிலைய அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சில நாட்கள் தங்க வைக்க முறையான ஏற்பாடு அவசியம். மேலும், முழு நாட்டையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்றவும், சுற்றுலாத் துறையின் வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க

”அருகம்பே கடற்கரைக்கு நுழையும் இடத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. அதை நாம் மாற்ற வேண்டும். 1987 இல் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் இதை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை செயல்படுத்த முடியவில்லை. மேலும், சுற்றுலாத்துறையில் ஈடுபடும் தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டும். சுற்றாடல் அமைச்சு, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதற்காகவே ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவித்திருந்தார். இந்த விடயங்களை ஜனாதிபதி நன்கு புரிந்து கொண்டுள்ளார். எனவே, அந்தப் பிரச்சினைகளுக்கு தேவையான தீர்வுகளை அவர் வழங்குவார் என நம்புகிறோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button