பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு தடை!
இந்தியாவில் பச்சையரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாசுமதி அரிசி என்ற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் விதமாக, டன்னுக்கு 1,200 டொலரைவிட குறைவான பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் அரிசியின் சில்லறை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் குருணை அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், பச்சையரிசி ஏற்றுமதிக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி தடைவிதிக்கப்பட்டது. ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மீது 20 சதவீத வரி விதிக்கப்படுவதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடா்ந்து பாசுமதி அல்லாத அனைத்து அரிசி வகைகள் ஏற்றுமதிக்கும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சராசரியாக டன்னுக்கு 1,200 டொலா் என ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பாசுமதி அரிசி, இந்த மாதம் பெரிய அளவிலான விலை வேறுபாட்டுடன் டன்னுக்கு 359 டொலா் என ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பாசுமதி அரிசி மீதான கட்டுப்பாடு தொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சில அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நிகழாண்டில் அவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பச்சையரிசிக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்ட நிலையில், அந்த அரிசியின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும், அதன் ஏற்றுமதி 4.36 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாசுமதி அரிசி என்ற பெயரில் பச்சையரிசி ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கான மேம்பாட்டு ஆணையத்துக்கு (ஏபிஇடிஏ) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டன்னுக்கு 1,200 டொலா் மற்றும் அதற்கு அதிகமான விலை மதிப்புடைய பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களைப் பதிவு செய்து அதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட விலையைவிட குறைவான ஏற்றுமதி ஒப்பந்தங்களில், அதன் விலையில் காணப்படும் வேறுபாடு குறித்து ஆராய்ந்து கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யவற்காக ஏபிஇடிஏ தலைவரால் அமைக்கப்படும் குழு, அதற்கான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.