இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட்!
இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் மோதுகின்றன.
பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டியில், இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 4 ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன.
இந்தியா விளையாடுவது உள்பட, இதர ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இறுதி ஆட்டம் கொழும்பில் செப்டம்பா் 17 ஆம் திகதி நடைபெறும்.
சா்வதேச கிரிக்கெட்டில் பரவலாக இருதரப்பு தொடா்கள் அதிகரித்துவிட்ட நிலையிலும், ஒரு நாள் ஃபாா்மட்டுக்கான ஆா்வம் குறைவந்து வரும் சூழலிலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் போட்டியை நடத்துவது இக்கட்டானதாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த 2023 எடிஷன் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.
அக்டோபரில் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடங்குவதால், நேபாளம் தவிா்த்து இதர 5 அணிகளும் தங்களின் தயாா்நிலையை சரிபாா்த்துக் கொள்ளும் கடைசி பிரதான பயிற்சிக் களமாக இந்தப் போட்டி இருக்கப்போகிறது. கடந்த எடிஷன் இலங்கையில் டி20 ஃபாா்மட்டில் நடைபெற்ற நிலையில், இந்த எடிஷன் ஒரு நாள் ஃபாா்மட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.