வருகிறது புதிய வர்த்தமானி : நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பேசிய அமைச்சர், தற்போதுள்ள இலஞ்ச ஒழிப்பு சட்டம் பொதுத்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையிலும் ஊழல் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறான தீர்மானத்தை வழங்கியிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களுக்காக வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தாலோ அதனை விசாரிக்கும் முழு அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.