கோலாகலமாக ஆரம்பமாகிறது ஜி20 உச்சிமாநாடு!
ஜி20 உச்சி மாநாடு, டில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (09) காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையில் நிகழ்ந்து வருகின்ற போரின் காரணமாக உலகநாடுகள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார தாக்கங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இவை தவிரவும், வறுமை அதனை எதிர்கொள்வதற்கு உலக வங்கிகள் போன்ற வளர்ச்சி வங்கிகளின் திறன்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளது.
எண்ணிம புத்தாக்கம், பருவநிலை மாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள காரணத்தால் இந்தியா இதில் அதிகளவு கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி வந்தடைந்துள்ளனர்.
மேலும், ஓமானின் துணைப் பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோ ஆகியோர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் மாத்திரமன்றி ஐ.நா. வின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜீவா உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
டில்லி வந்தடைந்த வெளிநாட்டு தலைவர்களையும், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் விமான நிலையத்தில் வைத்து மந்திரிகள் வரவேற்றனர்.
நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இந்த வரவேற்பில் இடம் பெற்றிருந்தது.
வல்லரசு நாடுகளின் தலைவர்கள்,பல வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் டில்லியில் முகாமிட்டிருப்பதனால் அங்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை இராணுவம் மற்றும் காவல்துறையினர் என ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மாநாடு நடைபெறும் அரங்கம், தலைவர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்து இடங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானப் படைகளும் இந்த பாதுகாப்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.