அரச அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை.!
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
உரிய அதிகாரிகளிற்கு எழுத்துமூலமான கடிதத்தின் வாயிலாக அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.
உரிய அறிவிப்புக்கள் இன்றி அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளிகளினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாகவும் அதிபரின் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரிகளிற்கும் அரசியல் பிரதிநிதிகளிற்கும் இடையிலான தொடர்புகள் குறைவாகவுள்ளதாகவும் இதனால் பல பிரச்சினைகளும், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடைகள் ஏற்படுவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு அதிபரின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இனிமேல், அரச மற்றும் அரை – அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படும்போதும், செயல்படுத்தப்படும்போதும், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும்.
அதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்படுமாறும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தனது கடிதத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.