இரண்டு சட்டமூலங்களுக்கு அனுமதி!
சிவில் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலங்கள் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் கவனம் செலுத்தப்பட்டது.
அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தலைமையில் அண்மையில் கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த சட்டமூலங்கள் இரண்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
சிவில் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் 205 ஆம் பிரிவுக்கு அமைய வழக்குகளின் தீர்ப்புக்களை வெளியிடுதல் மற்றும் சான்றுப் பிரதிகள் வழங்குதல் தொடர்பில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வழக்கொன்று தொடர்பான தரப்பினருக்கு தீர்ப்பை அல்லது தீர்ப்பின் சான்றுப் பிரதியொன்று இலவசமாக வழங்குவதற்கு இதன்மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அத்துடன், கட்டணம் செலுத்துவதற்கு உட்பட்டு உரிய பிரதிகளைப் பெறுவதற்கு ஏதுவான திருத்தங்களும் இதில் அடங்குகின்றன.
தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் ஊடாக 2023 ஆம் ஆண்டு 03 இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் மூலம் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட தினத்திலிருந்து 21 தினங்களுக்குள் தேர்தல் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள காலம் 21 தினங்களிலிருந்து 42 தினங்களாக மாற்றப்படுகின்றது.
தற்போதைய சட்டத்துக்கு அமைய தேர்தல் முடிவுகளை வெளியிட்ட தினத்திலிருந்து 21 தினங்களுக்குள் அரசியல் கட்சி அல்லது சுயாதீன குழுக்கள் அல்லது அபேட்சகர்களால் தேர்தல் செலவுகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறில்லை எனின் தேர்தல் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
அதற்கமைய அந்த காலம் 42 நாட்களாகத் திருத்தப்படுகின்றது.
அத்துடன், இந்தச் சட்டமூலம் ஊடாக தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்துக்கு அமைய விதிக்கப்படும் தண்டனைகள் அளவு போதுமானதாக இல்லை என்பதால் தற்போதைய நிதி நிலைமைக்குப் பொருத்தமான வகையில் தண்டப்பணம் இற்றைப்படுத்தப்படுகின்றது.