ஐஎம்எவ் இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் முதலாவது மீளாய்வு நடைபெற்று வரும் நிலையில், நிதியத்துடனான இணக்கப்பாடுகளில் 38 வீதமான நிபந்தனைகள் மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நிதியத்தின் இணக்கப்பாடுகளுள் எட்டு நிபந்தனைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனும் பிரிவின் கீழ் இருப்பதாகவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் முதலாம் மீளாய்வு நேற்றைய தினம்(14) ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த மீளாய்வை தொடர்ந்து, நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிதியத்தின் இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தாலும் இதுவரை அவற்றில் எதனையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிதியத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இணக்கப்பாடுடன் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டுமென வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், அவற்றுள் சில மாத்திரம் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிதியத்துடன் எட்டப்பட்ட 11 இணக்கப்பாடுகளின் முன்னேற்றங்களின் நிலை தொடர்பில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் நிதியத்துடன் எட்டிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நிறுவனத்தின் அறிக்கை மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.