News

சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பெரும் போராட்டம்

அரசுக்கு எதிராக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்று சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களும் ஏனைய சில தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன.

சுகாதார சேவைகள் ஆபத்தில்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் உறுப்பினர் வைத்தியர் ஜெயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தேசிய விரோத தினமாக செப்டெம்பர் 22 ஆம் திகதியை நாம் பிரகடனப்படுத்துவதுடன், அனைத்து வைத்தியசாலைகள் முன்பாகவும் இந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு இது தொடர்பில் விளக்கமளித்துள்ளோம். நாட்டின் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாக அவர் கூறியதுடன், எமது போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.

நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளன என நாட்டு மக்களுக்குத் தெரியும். அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறினோம். ஆனால், மக்களின் சுகாதாரம் தொடர்பில் அவர்களுக்குத் துளியளவும் அக்கறையில்லை. அரசியல்வாதிகளுக்கு இந்த வைத்தியசாலை கட்டமைப்பு அவசியமில்லாவிடினும் நாட்டு மக்களுக்கும் இது அவசியமாகும்.

ஆகவே, நாளைமறுதினம் 22ஆம் திகதி அரசுக்கு மீண்டுமொருமுறை தெளிவாக இந்த விடயத்தை உணர்த்தவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.டி.மெதிவத்த கருத்து வெளியிடுகையில், “நாட்டு மக்கள், விவசாய, கல்விசார், சுகாதாரத்துறை மற்றும் நாட்டின் பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களின் ஆதரவு இந்தப் போராட்டத்துக்கு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க அனைவரும் அரசின் மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button