இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் 15.5 சதவீதமாக இருந்த கடன் வட்டி வீதத்தை, இந்த ஆண்டு 12 சதவீதம் வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (21.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு புதிய சீர்திருத்தங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னெடுத்து வரும் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1 சதவீதத்தினால் குறைந்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6 சதவீதம் வரை, குறைக்க முடிந்துள்ளது.
அத்துடன் 1.8 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை, கடந்த ஓராண்டில், 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு முடிந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.