News

சுகாதார அமைச்சின் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய 2 உப குழுக்கள் நியமனம்

சிறிலங்கா சுகாதார அமைச்சின் மருந்து கொள்வனவு மற்றும் சேவையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கோபா என்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றில் கோபா குழு கூடிய போது குறித்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முதலாவது உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, டயானா கமகே, அசோக் அபேசிங்க, ஜயந்த கெட்டகொட மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உதுகொட தலைமையில் இரண்டாவது உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, விமலவீர திஸாநாயக்க, மஞ்சுள திஸாநாயக்க, வீரசுமன வீரசிங்க மற்றும் முதிதா பிரஷாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் மனிதவள முகாமைத்துவம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள், நிறுவனங்களின் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை இந்த உப குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டு உபகுழுக்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டு அந்த குழுக்களின் விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button