News

ரயில்வே சீசன் டிக்கெட் ரத்து செய்யப்படும் அறிகுறி!

ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் என்ற பருவச்சீட்டு முறை ரத்து செய்யப்படும் என ‘அருண’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ரயில் கட்டணமும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தற்போதைய குறைந்தபட்ச ரயில் கட்டணமான 20 ரூபாவில் இருந்து ஏனைய அனைத்து கட்டணங்களையும் பேருந்து கட்டணத்திற்கு இணையான வீதத்தினால் அல்லது அதற்கு அண்மித்த வீதம் வரை உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளது.

ரயில் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் அதிகாரிகள் இந்த முன்மொழிவுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 19,000 ஊழியர்களைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ரயில்வே திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதால் அதற்கான நிதியை ஒதுக்குமாறு திரைசேரிக்கு அறிவிக்கப்பட்டமையே இந்த முன்மொழிவுகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றும் முன்மொழிவுடன், முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ரயில்வேயில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் பயண பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button