இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் புதிய சர்ச்சை
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பதிவு விலக்குக்கு அமைய இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருள் வகை ஒன்று நோயாளர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்யூனோகுளோபலின் எனப்படும் இந்த வகை மருந்து நான்கு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
பொதுவாக மருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு வழங்கப்படும் பதிவு அனுமதிக்கு புறம்பான வகையில் விசேட அனுமதி அடிப்படையில் இந்த மருந்து பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தனியார் நிறுவனத்தினால் இந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கையின் தனியார் நிறுவனமொன்றினால் இந்த மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய மருத்துவமனை, கண்டி, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் இந்த மருந்து பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் போது நோயாளிகளுக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனித உடல் உறுப்பு கொடையாளர்களிடமிருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த வகை மருந்துப் பொருள் உற்பத்தி மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த மருந்தின் ஊடாக சில தொற்று நோய்கள் நோயாளிகளுக்கு பரவும் என சிரேஸ்ட மருந்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மருத்துவ சாதனங்களிலும் குறைபாடு காணப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சாதனங்களை சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மருத்துவ சாதனங்கள் பதிவு விலக்கு அடிப்படையில் தருவிக்க்பபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.