இலங்கை வரும் அமெரிக்க எரிபொருள் நிறுவனம்!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ஒதுக்கப்பட்ட 150 எரிபொருள் நிலையங்கள் மூலம் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 20 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
Shell பிஎல்சியின் கீழ் செயல்படும் ஆர்எம் பார்க்ஸ், இலங்கையில் நான்காவது சில்லறை விற்பனையாளராக மாறவுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி (LIOC), மற்றும் சீனாவின் சினோபெக் நிறுவனங்களுக்குப் பின்னர் நாட்டின் எரிபொருள் சந்தையில் அமெரிக்கன் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் நுழைகிறது.
இந்த நிறுவனத்திற்கு முதலில் 150 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படும், பின்னர் 50 எரிபொருள் நிலையங்களை சொந்தமாக திறக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆர் எம் பார்க்ஸ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு எரிபொருள் நிலையத்தையாவது கொண்டிருக்கும். பல நிலையங்கள் கொழும்பு போன்ற நகர்ப்புற மையங்களில் நிறுவப்படவுள்ளன.
முன்னதாக ஆகஸ்ட் பிற்பகுதியில் எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய சீனாவின் சினோபெக்கைப் போலவே, ஆர் எம் பார்க்ஸூம், அதன் எரிபொருளை தள்ளுபடி விலையில் விற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.