இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள்
இலங்கையிலிருந்து மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டி கண்ணொருவ விலங்கு உற்பத்திப்பண்ணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் முட்டைக்கான பற்றாக்குறை காணப்படும் போதும் மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையானது முட்டைக்கான கேள்வி வேறு நாடுகளுக்கு செல்வதை பாதுகாக்கும் வகையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீட்டிற்கு இணங்க இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் முட்டை உற்பத்தியில் தன்னிறைவு காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் முட்டைக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்திசெய்யும் வகையில் தேவையான அளவு தாய்க் கோழிகளையும், சூல் முட்டைகளையும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக சிங்கப்பூர், மலேசியா, கொரியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான கேள்வி அதிகரித்த நிலையில் டிசம்பர் மாதம் வரை முட்டை இறக்குமதியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்பின்னர் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது.
தற்போது நாட்டில் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அடுத்த வருடத்தில் விலை மேலும் குறைவடையும்.”என அவர் தெரிவித்துள்ளார்.