வெளிநாடு ஒன்றில் அரசு ஊழியர்களுக்கு அதிஷ்டம்: பெருமளவில் உயரப்போகும் சம்பளம்
குவைத் நாட்டின் அரச நிறுவனங்களில் ஒரே தரநிலையில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் பலரது சம்பளம் வெகுவாக அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் மிகவும் வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குவைத்.
குவைத் நாட்டின் பொதுத்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இரண்டு வேறுபட்ட சம்பளம் வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, சிவில் சேவை விதிமுறைகளின் கீழ் வேலைக்கு தேர்வானவர்கள், சிறப்பு வேலை விதிமுறைகளின் கீழ் வேலைக்கு தேர்வானவர்களை விடவும் குறைவான சம்பளம் வாங்குகின்றனர். அதாவது சிறப்பு சலுகையின் கீழ் வேலை செய்பவர்களுக்கு அதிகம் சம்பளம்.
இத்தகைய சம்பள வேறுபாடு பல்வேறு அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது. எனவே ஒரே மாதிரியான சம்பள நடைமுறையை கொண்டு வரும் வகையில் குவைத் அரசு ஒரு விடயத்தை முன்னெடுத்துள்ளது.
இதன்படி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அண்மையில் இதுதொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது போதிய விவாதத்திற்கு பின்னர் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஒரே தரநிலைக்கு ஒரே சம்பளம் என்ற நிலை வந்துவிடும். குறிப்பாக சிவில் சேவை விதிமுறைகளின் கீழ் வேலைக்கு சேர்ந்தவர்களின் சம்பளம் உயரும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.