News

கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

கல்வி அமைச்சின் வெற்றிடங்களை நிரப்ப முன்வைக்கப்பட்டுள்ள யோசனை | Edu Ministry Career Opportunities Academic Staff

கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும் எனவும் அதற்கான நிதியை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.10.2023) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரிணி அமரசூரிய எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாட்டில் பத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவை பாடங்களுக்கான கட்டணத்தை அறவிட்டே கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

எனினும் அரசாங்கமும் அவற்றுக்கு நிதியை வழங்குகிறது. தற்போதைய பிரச்சினை என்னவெனில் நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என்பதாகும்.

இதில் இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒன்று நிதி ஒதுக்குதல் மற்றது தட்டுப்பாடு. அந்த வகையில் கல்விசார் ஊழியர்களுக்கான 1054 வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஓய்வு பெற்றுள்ளவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அதில் மேலும் 126 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அடுத்த வருடத்திற்காக அதனை பெற்றுக் கொள்வதற்கு வரவு செலவு திட்டத்திற்கு யோசனைகள் என்னால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் கல்வித்துறை சார்ந்த வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்ப முடியும்.

அதனைத் தவிர தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களும் நிலவுகின்றன.

அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக நிதியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் வரவு செலவு திணைக்களத்திற்கு நாம் அறிவித்துள்ளோம். அடுத்த வருடத்தில் அந்த வெற்றிடங்களை நிரப்ப அதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எவ்வாறெனினும் ஒவ்வொரு நிறுவனங்களும் அந்த நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்திலிருந்து தற்காலிகமாக இந்த வருடத்திற்கான குறித்த நிதியை அதன் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button