இலங்கையை பிரிக்ஸ் பிளஸ் அமைப்பில் இணைக்க யோசனை!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் செயல்முறையின் ஒரு படியாக இலங்கை பிரிக்ஸ் பிளஸ் அமைப்பில் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் புதிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக இலங்கை நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியுமென நேற்று இடம்றெ்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இலங்கை ஒரு வங்குரோத்து அடைந்த நாடு என வெளிப்படையாக நாம் கூறியது ஒரு பெரிய தவறாகும். இது எனது தனிப்பட்ட கருத்து. வங்குரோத்து அடைந்த நாடொன்றுக்கு வேறு எந்த நாடும் உதவாது. இந்த நிலையிலும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எமக்கு உதவ முன்வந்திருந்தன.
எவ்வாறாயினும், அந்தந்த நாடுகளின் கொள்கைளுக்கமைய இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதும் மட்டுப்படுத்தப்படும். இந்த நிலையிலேயே, தற்போது நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்கியிருக்கிறோம். அவர்களின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.
நிதியத்திடம் சிக்கியுள்ள எமக்கு ஒரு தீர்வு அவசியம். இதற்காக நாம் பிரிக்ஸ் பிளஸ் அமைப்பில் இணைய வேண்டும். இது எமக்கு சாதகமாக அமையும்.
சவூதி அரேபியா மற்றும் ஆர்ஜன்டினா ஆகிய நாடுகளும் தற்போது இந்த அமைப்பில் இணைய முயற்சிக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் கடனுதவி தொகையை அதிகரிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிக அக்கறை எடுத்து செயல்பட வேண்டும்” என்றார்.