நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: இன்று வெளியாகவுள்ள வர்த்தமானி
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதனால் அந்த வெற்றிடத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள நபர் தேர்தல் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட உள்ளார்.
நஸீர் அஹமட்டுக்கு அடுத்தாக அந்தப் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இடம் பெற்றுள்ளார். அதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு கட்சியின் தீர்மானத்தினை மீறி நசீர் அஹமட் வாக்களித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் அவர், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சரியானது என கடந்த 6 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.