தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!
தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்த அழைப்பு விடுத்தார்.
தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை இன்று (11) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை (National IT and BPM Week) ஆரம்பித்துவைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி , ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்ப தொழில்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் குறித்து அறிவை வழங்குதல், திறன் மேம்பாடு, தொழில் ஆலோசனை மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேல்மாகாணத்தில் (சா / தரம் மற்றும் உ / தரம்) கற்கும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவன மாணவர்கள், தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை தெளிவூட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
03 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தொழிற்துறை மற்றும் தொழில் ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை, வதிவிடப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குவதோடு, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறைகள் குறித்த செயலமர்வுகளும் நடத்தப்படும்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க;
“இக்கண்காட்சியில் பங்கேற்கும் பலர் இதன் மூலம் எவ்வாறு நமது வெளிநாடு செல்லும் ஆசையில் வெற்றி பெறலாம் என்றே எதிர்பார்க்கின்றனர். இது அனைவரினதும் கனவாகும். ஆனால் இக்கண்காட்சி மூலம் நமது நாட்டிற்கு எவ்வாறு பயன் பெறுவது என்பதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.
இன்று வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற தருணத்தில் நாம் இருக்கிறோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது மட்டும் போதுமானதல்ல. பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டும். நமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கும் பணம் செலுத்த வேண்டும். அதற்கான அந்நியச் செலாவணி எம்மிடம் இல்லை. எனவே, நாம் மீண்டும் கடன் பெற வேண்டியேற்படும்.
நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்கிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்த நாட்டில் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துடன், நாம் உலகச் சந்தைக்கு நகர்ந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் வருமானத்தை அதிகரித்து மேலதிகக் கையிறுப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்பட்டுவதன் காரணமாக இந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.
இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் நமது பொருளாதார நவீனமயமாக்கல் ஆகும். மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாகும். டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி பேசினால், நாம் முன்னோக்கிச் செல்லும் போது பல விடயங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.
அதன்போது, தகவல் தொழில்நுட்பத்தில் அறிவும் பயிற்சியும் கொண்ட மனித வளம் தேவை. அந்த படைப்பலத்தைக் கட்டியெழுப்ப நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
நாங்கள் புதிய பல்கலைக்கழக கட்டமைப்பொன்றை ஆரம்பிப்போம். அதன்போது, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறிமுறைப்படி அரசாங்கம் 03 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை தொடங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று இலாபத்தை மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்யும் குழுவுடன் அந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எப்படியிருந்தாலும், இந்த புதிய தொழில்நுட்ப அறிவை வழங்க பல புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளோம். இரண்டாவதாக, தற்போதுள்ள 450 தொழிற்பயிற்சி மையங்களை இணைத்து தொழிற்கல்லூரிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் பயிற்சி நவீனமயமாக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் செய்யும் அதேவேளை, பாடசாலைகளுக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றில் தங்கியுள்ளது. எனவே நாம் அதற்குள் செல்ல வேண்டும்.
நெல் விளைச்சல் வெற்றிபெறாதபோது, கறுவா விளைச்சலுக்கு சென்றோம். கறுவாவை இழந்தபோது கோப்பி பயிரிடப்பட்டது. கோப்பி இல்லாத காலத்தில் தேயிலை, இரப்பர் தென்னை ஆகியன பயிரிடப்பட்டன. இப்போது நாங்கள் சுற்றுலாத் துறை மற்றும் ஆடைத் தொழில் செய்கிறோம். இவை அனைத்தும் கடந்த காலத்தைச் சேர்ந்தவை. ஆனால் நாம் எதிர்காலத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக முடிந்தவரை பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த நாட்டின் தேவையை விட இரண்டு மடங்கு மக்களை நாம் உருவாக்க வேண்டும். சிலர் வெளிநாடு செல்கிறார்கள். அவர்கள் நம் நாட்டுக்கு அன்னியச் செலாவணியை அனுப்புகிறார்கள்.
இன்று, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசியாவின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. எனவே அனைவரும் இணைந்து முன்னேறுவோம். புதிய பல்கலைக்கழகங்களில் நீங்கள் இணையலாம். மேலும், தொழில்முறை மையங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வழங்கலாம்.
மேலும் இந்த அறிவை பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதில் நாம் இணைந்து பணியாற்றலாம். அதற்கு நீங்கள் தயாரா இல்லையா என்பதே எனது கேள்வி. பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க இந்தப் பணிகளுக்கு தலைமையேற்றுள்ளார். அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பத்துடன் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்போது, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன. இன்று பலர் வேலை இழந்துள்ளனர் அவ்வாறான இளைஞர்களுக்கு இந்த அறிவை வழங்க முடியும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். அதற்கான உங்கள் பதிலைக் கூறுங்கள்.