ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேற்படி கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார, கண்டியில் நேற்று(16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது சுமார் 17 இலட்சம் அரச ஊழியர்கள் மிகவும் துரதிஷ்டவசமான நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது வாழ்க்கைச் சுமை எகிறிவிட்டது. தண்ணீர், மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய உணவு, மதிப்பீட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்படியாகாத வகையில் உயர்ந்துள்ளது.
இன்று எமது பிள்ளைகள் தமது கல்வியை ஒழுங்காகச் தொடர முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர். இதற்கு மேல் எங்களால் தாங்க முடியாது.
வாழ்க்கைச் செலவு இவ்வளவு உயர்ந்தாலும் எட்டு வருடங்களில் ஐந்து சதம் கூட சம்பள உயர்வு இல்லை.
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூபாய் 20,000 சம்பள உயர்வு கிடைக்கும் என்பதே எங்களின் இறுதி நம்பிக்கை.
அது நடக்கவில்லை என்றால், ஜனவரி மாதம் முதல் தொழில்முறை முடிவுகளை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” எனக் குறிப்பிட்டார்.