கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பமாகியுள்ள புதிய திட்டம்!
இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புதிய சூரியப்படல் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தின் மேற்கூரையில் 100 kWp ஆலை நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நாட்டில் மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறைகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் முகமாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 19 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூரியப்படல் திட்டத்தின் மூலம் தினசரி 600 kWh ஆற்றல் அலகுகள் வீதம் மாதத்திற்கு 18,000 kWh ஆற்றல் அலகுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது, இது இலங்கையில் 200 சாதாரண வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாக இருக்கும் அளவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதில் அடுத்த ஆண்டு (2024) மேலும் 1,800 kWp திறனை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலமாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் இலங்கையின் மிகப்பெரிய மின்சார நுகர்வோர்களில் ஒன்றாக விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில்,பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை மொத்த ஆற்றல் அலகு நுகர்வின் 10% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.