பயணிகளிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய சிறிலங்கன் எயர்லைன்ஸ்!
சிறிலங்கன் எயர்லைன்ஸின் சீரற்ற செயற்பாடுகளின் காரணமாக தொடர் இடையூறுகளை எதிர்நோக்கியுள்ள வாடிக்கையாளர்களிடம் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
தொடர் ரத்து மற்றும் தாமதங்கள் போன்ற பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் சிறிலங்கன் எயலைன்ஸ் இன்றைய தினம் (25) மன்னிப்புக் கோரியுள்ளது.
அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இன் இரண்டு ஏ330 ரக விமானங்கள் பல நாட்கள் தரையிறக்கப்பட்டதால் விமான நிறுவனம் சவால்களை எதிர்கொண்டது.
அதில் ஒரு விமானத்திற்கு நீடிக்கப்பட்ட சோதனை தேவைப்பட்டதனாலும், உலகளாவிய விநியோக பற்றாக்குறை காரணமாக ஒரு பகுதியை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகும் பல நாட்கள் தரையிறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் மற்றைய விமானமும் பாரிஸில் வைத்து அதன் சில்லு வெடித்ததனால் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதே போல், உதிரிப் பாகங்களைப் பெறுவதிலும், புதிதாக இரண்டு A320 ரக விமானத்தைக் குத்தகைக்கு எடுபதில் தாமதம் ஏற்பட்டதால், விமானப் போக்குவரத்தில், தவிர்க்க முடியாத விமான ரத்து மற்றும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான தாமதங்களால் பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஏற்றுக்கொள்வதுடன், பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த அயராது உழைத்து வருவதாகவும், விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இடையூறுகளை நிவர்த்தி செய்து எதிர்வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது,
அதன்பிரகாரம் அண்மையில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானம் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு A320 விமானங்களை அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட இயந்திரங்களுடன் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இவற்றுடன் மேலதிகமாக, எயர் பெல்ஜியத்தின் காப்புப்பிரதி விமானமான A330 இந்த வார இறுதியில் வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.