ஐ.எம்.எப் உடன் முரண்படும் ரணில் விக்கிரமசிங்க ! சீனாவிற்கு விசேட சலுகை
கொழும்பு துறைமுகநகர திட்டத்தில் சீனா தலைமையிலான உத்தேச வசதிப்படுத்தல் மையத்திற்கு பெருநிறுவன வருமான வரி மற்றும் பங்குலாப வரி ஆகியவற்றில் இருந்து 15 ஆண்டுகளுக்கு அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில், ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் 2008 மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் சட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவுக்கான வசதிப்படுத்தல் மையமாக மாற்றுவதே நோக்கமாகும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் சட்டத்தின் பயன்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் முன்னர் வழங்கப்பட்ட ஊக்க சலுகைகள் இலங்கைக்கு உத்தேசிக்கப்பட்ட நன்மைகளை வழங்கியுள்ளனவா என்பதை தீர்மானிக்கும் வகையில் ஊக்க சலுகையின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள் நடைமுறையில் இருக்கும் வரை குறித்த சட்டம் மீளெடுக்கப்பட வேண்டும் அல்லது இடைநிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
உத்தேச போக்குவரத்து மையத்தின் 70 வீதமான பங்குகளை சீனாவின் Merchants Port Holdings Company Limited நிறுவனம் கொண்டுள்ள அதேவேளை 15 வீதமான பங்குகள் துறைமுக அதிகாரசபை வசமும் மீதமுள்ள 15 வீதமான பங்குகள் Access Engineering PLC வசமும் காணப்படுகின்றது.
உத்தேச வசதிப்படுத்தல் மையத்தின் இரண்டு வருட திட்ட காலத்தில் பிடித்துவைத்தல் வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.