2024 ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்த முயற்சி!
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை ஐ.பி.எல். போட்டி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரிடம் தாம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்றை விடுத்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர்,
“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷாவுடன் நான் அண்மையில் திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தினேன்.
அப்போது இராஜதந்திர நிலைமை குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் ஐ.பி.எல் தொடரின் மூன்று போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு நான் ஆலோசனை முன்வைத்தேன்.
இந்தப் போட்டிகளை இலங்கையில் நடத்த வாய்ப்புக் கிடைத்தால் அது முக்கிய வெற்றியாக அமையும்” என்றார்.
தென்னிந்தியாவிலும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மத்தளையை ஐ.பி.எல். வலயமாக மாற்ற வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் பொதுத் தேர்தல் காரணமாக இதற்கு முன்னர் இரு முறை ஐ.பி.எல். போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டிருந்தன.
2009 தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டதோடு 2014 இல் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் மத்திய கிழக்கில் ஆடப்பட்டன.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தொடருடன் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.