15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் மற்றுமொரு சாதனை
உலகில் காணி உரிமை கோரி பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்தர காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் வெற்றி என சுட்டிக்காட்டிய அதிபர், 20 இலட்சம் பேர் பயன்பெறும் ‘அஸ்வெசும’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியமையும் 15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததும் ஏனைய சாதனைகளாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (05) இடம்பெற்ற உரித்து திட்டத்தின் முதற்கட்டமாக 10 ஆயிரம் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வாறான பரந்த பணியை அரசாங்கம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நாட்டை எந்த இடத்தில் வைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் அதிபர் குறிப்பிட்டார்.
அரசாங்க காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியுமாக இருந்தால் அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், 08ஆவது பரிந்துரையில், “உரித்து திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.