News

பேருந்துகளில் விசேட நடவடிக்கை

பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் இன்று (07) நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக இரகசிய கெமரா பொருத்தப்பட்ட சிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 234 குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ளன.

பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அவற்றில் முதன்மையானவை.

இதுபோன்ற சில சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பல சம்பவங்கள் காவல்துறையிடமோ அல்லது எந்த சட்ட அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்யப்படுவதில்லை.

இதனையடுத்து, பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை இன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக 234 குழுக்கள் சிவில் உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ரகசிய கெமராக்கள் பொருத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

கொழும்பு பெஸ்டின் மாவத்தை பிரதான பஸ் நிலையம், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் தும்முல்லை உட்பட பல பகுதிகளில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 345வது பிரிவின்படி, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சட்டவைத்திய அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கவும் இந்த நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரயில்களுடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்,  இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

109 என்ற இலவச எண்ணின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை மக்கள் தெரிவிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button