News

இலங்கையின் திறக்கப்படவுள்ள முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி….!

இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி நீர்கொழும்பில் உள்ள பொலகல அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட்  திறக்கப்படவுள்ளதாக அந்த விடுதியின் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவரின் அறிவித்தலின்படி, சுமார் 13 ஏக்கர் நீர் மேற்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் 31 அறைகளை உள்ளடக்கிய இந்த சொகுசு விடுதியானது எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியின் நீண்டகால நிலைத்திருப்பை கருத்தில் கொண்டு விருந்தோம்பல் துறையில்  சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

“நீர்கொழும்பில் உள்ள பொலாகல, நீர்நிலையில் அமைந்திருக்கும் இந்த விடுதியானது ஆடம்பரமான அமைப்பைக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், சுற்றுச்சூழலை நேசிக்கும் தன்மையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது,” என விடுதியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களையும் இணையற்ற விருந்தோம்பலுக்காக வரவேற்க காத்திருக்கும் இந்த தளமானது எதிர்காலத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளின்பால் ஈர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு தங்குவதும், விருந்தோம்புவதும் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக அக்ரோ மிதக்கும் உல்லாச விடுதியின் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த மிதக்கும் விடுதியுடன் இணைந்ததாக பெரிய பண்ணையும் காணப்படுவதனால், இரசாயனங்களற்ற பண்ணையில் வளர்க்கப்படும் தாவரம் மற்றும் விலங்குகள் விருந்தினர்களின் தேர்விற்கு ஏற்ப சமைத்து கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்படி பல புதுமையான அம்சங்களை கொண்ட இந்த உல்லாச விடுதியின் வடிவமைப்பானது, கிரிக்கெட் நட்சத்திரம் திலகரத்ன தில்ஷான் உட்பட சுமார் 30 உள்ளூர் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button