2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இலங்கையின் இளநீர்
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது நமது நாட்டின் செவ்விளநீர் ஒன்று 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் நம் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பயிராக செவ்விளநீர் மாறும் என்பது உறுதி என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்றுமதிக்காக செவ்விளநீர் பயிரிடும் முதலாவது கிராமம் கடந்த ஆண்டு முருதவெலவில் தொடங்கப்பட்ட நிலையில், இவ்விரு கிராமங்களிலும் 10 ஆயிரம் செவ்விளநீர் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை செவ்விளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும், பல நாடுகளில் இருந்தும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செவ்விளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை வாரத்திற்கு சுமார் 252 ஆயிரம் செவ்விளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் செவ்விளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, கடந்த வருடம் (2023) எதிர்பார்த்த வருமானம் ஆறு பில்லியன் ரூபாவாகும்.
செவ்விளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிர், பல நாடுகள் செவ்விளநீர் பயிரிட முயற்சித்தாலும், இலங்கையின் செவ்விளநீர் போன்ற அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதன் காரணமாக, இந்த நாட்டில் செவ்விளநீருக்கான உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.
அதன்படி, ருவாவ கிராமத்தில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை மாதிரி கிராமத்தின் பயிர்ச்செய்கைக்காக 1600 செவ்விளநீர் நாற்றுகளை நேற்று விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் தென்னைச் செய்கை சபையின் தலைவர் திருமதி மாதவி ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த அமரவீர,
“உலகில் மிகவும் சுவையான செவ்விளநீர் இலங்கையின் செவ்விளநீர் ஆகும். எனவே எதிர்காலத்தில் இலங்கை Sri Lanka Sweet Coconut வர்த்தக நாமத்துடன் இலங்கையின் செவ்விளநீர் பழத்தை உலகில் பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு தேவையான வேலைத்திட்டம் தென்னை அபிவிருத்தி சபை மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் நமது நாட்டின் செவ்விளநீர் பழம் ஒன்று 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நம் நாட்டின் செவ்விளநீருக்கு உலகில் எந்த நாட்டிலும் போட்டி இல்லை. இப்போது நம் நாட்டின் தொழிலதிபர்களுக்கு இடையேதான் போட்டி.
ஆண்டுக்கு 200 கொள்கலன் செவ்விளநீர் டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது செவ்விளநீர் ஏற்றுமதி செய்வதால், ஒரு பழத்திற்கு, 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த தொகையை 2,000 ரூபாய் அளவில் பராமரிக்க ஏற்றுமதியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
எதிர்காலத்தில் நம் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பயிராக செவ்விளநீர் மாறும் என்பது உறுதி. இப்போது கூட உலகில் உள்ள அதிக தேவையில் 02 சதவீதத்தை கூட நம்மால் வழங்க முடியாது.
எனவே, செவ்விளநீர் பயிர்ச்செய்கையை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.