ஆரம்பம் முதல் வட்டியை செலுத்துமாறு கோரிக்கை!
மின் இணைப்புகளை வழங்கும் போது இலங்கை மின்சார சபையினால் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வைப்புத்தொகைக்கான, குறித்த வைப்புத் தொகையை பெற்ற நாள் முதல் வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (21) முர்து பெர்னாண்டோ, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரநாத் தாபரே இதனை தெரிவித்தார்.
மின்சார பாவனையாளர்கள் செலுத்தும் வைப்புத் தொகைக்கு இவ்வருடத்திலிருந்து 11.67 வீத வருடாந்த வட்டியை செலுத்துவதாக இலங்கை மின்சார சபை முன்னர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருந்தது.
ஆனால் அது தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும், நுகர்வோர் உரிய தொகையை வைப்பிலிட்டதிலிருந்து வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவிந்தநாத் தாபரே கோரியுள்ளார்.
அதன் பின்னர், மனுவின் மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.