இந்திய – இலங்கை பாலம்! ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள முன்மொழிவு
இந்தியாவையும் (India) இலங்கையையும் (Sri Lanka) இணைக்கும் தரைப்பாலத்தை அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவு, எதிர்வரும் வாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தின் அடிப்படைக் கருத்துகளை அரசாங்கம் மீளாய்வு செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க அண்மையில் இந்தியாவில் இது தொடர்பான கலந்துரையாடல்களை நிறைவு செய்திருந்தார்.
தரைப்பாலத்தின் நன்மைகள் அதற்கமைய, தரைப்பாலத்தின் கட்டுமானம், உத்தேச திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நன்மைகளை ஆராய்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உட்பட உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் ரத்நாயக்க பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
அதேவேளை, இந்திய அரச அதிகாரிகள், தரைப்பாலம் கொண்டு வரக்கூடிய நன்மைகளை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட இறக்குமதி – ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த தரைப்பாலமானது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு கடல்சார் கப்பல் அல்லது விமானங்களுடன் ஒப்பிடும்போது குறைவான போக்குவரத்து செலவுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.