சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் பிரவேசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், 4 மாதங்களுக்கு மேலாகியும் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய 2 இலட்சம் மாணவர்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளுக்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், அந்த பெறுபேறுகளின் தாமதம் காரணமாக உயர்தர பாடப் பிரிவுகளை தெரிவு செய்வதில் மாணவர்களின் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மீண்டும் மீள் மதிப்பீட்டை நடத்தி பெறுபேறுகளை விரைந்து வெளியிடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.