தேசிய பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது குறித்து கல்வி அமைச்சு தகவல்
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (ஜூன் 02) நிறைவடையும் என கல்வி அமைச்சு (Ministry of Education Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த காலக்கெடுவிற்கு பின்னர் எந்தவொரு விண்ணப்பத்தையும் பாடசாலைகளுக்கோ அல்லது கல்வி அமைச்சுக்கோ அனுப்ப வேண்டாம் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்டன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலை அதிபர்கள் ஊடாக நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, பாடசாலைகள் தகுதி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலை அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.