News

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

நாட்டில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் சிறிலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நமது நாடு வங்குரோத்தடைந்த நாடாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் நாம் வங்குரோத்தடைந்த நாடு என்ற அவப்பெயரில் இருந்து முற்றிலும் விடுபடுவோம்.

இது தொடர்பான ஒப்பந்தமும் அடுத்த சில வாரங்களில் எட்டப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாகிறது. எனவே இந்த பணியை இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்வோம்.

ஆனால் இதில் மட்டும் திருப்தி அடைய முடியாது. இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கு 2042 வரை கால அவகாசம் கிடைக்கும் என நம்புகிறேன் என ரணில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் சிலர் நீதிமன்றத்தை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

இவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது, தேசிய கொள்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button