தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகார வர்த்தமானி அறிவித்தல்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை1,700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவை, இன்று (04) உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும், அதி விசேட வர்த்தமானி கடந்த மே 21 ஆம் திகதி வெளியாகியது.
குறித்த அதி விசேட அறிவித்தலுக்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் ரூ. 1,350 ஆகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் நாளாந்த விசேட கொடுப்பனவு ரூ. 350 ஆகவும் என, மொத்த நாளாந்த சம்பளம் ரூ. 1,700 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் நாளாந்த வரவு செலவு சலுகைக் கொடுப்பனவும் உள்ளடக்கப்படுவதோடு, ஊ.சே.நி. உள்ளிட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதில் இந்த தொகை (ரூ. 1,350) கருத்தில் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தோட்டக் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.