அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவையும் மீறி அரச ஓய்வூதியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்க அனைத்து அமைச்சுக்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு (Pradeep Yasarathna) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தேர்தல் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அரச ஓய்வூதியர்களுக்கு மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவது பொருத்தமற்றது என்பதனால் அதனை ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆணைக்குழுவின் உத்தரவையும் மீறி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, குறித்த கொடுப்பனவை செப்டம்பர் மாதம் முதல் வழங்குமாறு சுற்றறிக்கை வெளியிட்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 104b(4)(a) பிரிவின்படி, தேர்தல் காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு சொத்தையும் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுச் சொத்துக்களுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் விதிகளை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டவர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




