News

அமைச்சரவையின் தீர்மானம்! மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விசேட வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வயதாக குறைக்கும் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும்  அமைச்சரவைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

176 விசேட வைத்தியர்கள் தங்களது கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைக்கும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விசேட வைத்தியர்கள்

இருதயவியல் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், நரம்பியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், இரத்தக்கசிவு, கண் மருத்துவம், அனஸ்தீசியா, குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பு ஆலோசகர்களாகவுள்ள விசேட வைத்தியர்களே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ​​மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு, எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

63 வயது

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 17-10-2022 திகதியிடப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை மனுதாரர்களான, வைத்திய நிபுணர்கள் சவால் செய்துள்ளதாகவும், இந்த தீர்மானம் சட்டவிரோதமானதாகவும், தமது நியாயமான எதிர்பார்ப்பை முழுமையாக மீறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறைந்தது 63 வயது வரை சேவையில் தொடர வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button