13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு: மகிந்த
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நான் எதிர்க்கவில்லை,13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமையில் 13 தொடர்பில் பேசுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டம்
கண்டியில் கடந்த 24ஆம் திகதி கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தாங்கள் கடந்த காலங்களில் 13 பிளஸ் எனத் தெரிவித்துவிட்டு இப்போது அது தேவையில்லை என்று குறிப்பிடுவதற்கான காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எரிகின்ற வீட்டில் பெட்ரோல் ஊற்ற நான் விரும்பவில்லை. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு எதிராக தேரர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், 13ஐ ஆதரிக்கும் கருத்தை நான் தற்போது வெளியிட்டு நிலைமையை மோசமாக்க விரும்பவில்லை. அதற்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு நான் எதிர்ப்பு என்று அர்த்தமல்ல.
தேசிய இனப்பிரச்சினை
13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண வேண்டும். தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளார்.