உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க நடவடிக்கை!
உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்குரிய பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று அலரி மாளிகையில் கூடியது.
உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ கால எல்லை கடந்த மாதம் 19ம் திகதியுடன் நிறைவு பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகளை கண்காணித்தல், மக்களுக்கு எதுவித அசௌகரியமும் ஏற்படாதவாறு வழமை போல உள்ளூராட்சி மன்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள், மாகாண சபையுடன் இணைந்து செயற்படுதல் போன்ற பல விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களை நாடு முழுவதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தக் குழு முக்கியமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அங்கு சுட்டிக்காட்டினார்.
அதேபோல் அந்த நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கைகளும் இந்தக் குழுவின் ஊடாக முகாமைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு ஆளுநர்களும், மாவட்ட செயலாளர்களும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.