News

மே நடுப்பகுதியில் வடக்கிற்கு பேராபத்து!

வடக்கு மாகாணத்தின் தற்போதைய வெப்பநிலை உயர்வின் அடிப்படையில், பல பகுதிகளின் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்து மே மாதத்தின் நடுப்பகுதியில் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

அவரது எதிர்வுகூறலில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

“அடுத்த 15 நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் வெப்பநிலை உயர்வாக காணப்படும். சூரியனுடைய நிலை 08 பாகை 37 கலை வடக்கு அகலாங்கிலும் 69 பாகை 14 கலை கிழக்கு நெட்டாங்கிலும் அமைவு பெற்றுள்ளது.

இதனால், எதிர்வரும் 30.04.2023 வரை வடக்கு மாகாணத்தின் ஆவியாக்கத்தின் அளவு கடந்த வாரத்தினை விடவும் 19%இனால் அதிகரித்து காணப்படும்.

கடந்த மாரி கால பருவ மழை இயல்பை விட குறைவாக இருந்தமையால் மாகாணத்தின் தரைமேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீரின் அளவு ஏற்கனவே குறைவாக காணப்படுகிறது.

அதேவேளை, தற்போதைய வெப்பநிலை உயர்வும் அதன் விளைவான ஆவியாக்கத்தின் அதிகரிப்பும் அவற்றின் அளவு மேலும் குறைவடையும்.

இதனால் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளின் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்து மே மாதத்தின் நடுப்பகுதியிலேயே மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

தீவுப்பகுதிகளுக்கு வழமையாக வருடந்தோறும் ஏற்படுகின்ற நீர்ப்பற்றாக்குறையின் தீவிர நிலைமை முன்கூட்டியே ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது.

மே நடுப்பகுதியில் வடக்கிற்கு பேராபத்து | Temperature Of Northern Province Water Shortage

அதி கூடிய வெப்பநிலை காரணமாக இடம்பெறும் மேற்காவுகைச் செயற்பாட்டின் (உகைப்பு) காரணமாக ஆங்காங்கே மத்தியானத்திற்கு பிறகு அல்லது அதிகாலை வேளைகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் மழை கிடைக்கும் இடங்களை எதிர்வு கூற முடியாது.

  1. இன்று முதல் நண்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை இயலுமான வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
  2. போதுமான அளவுக்கு நீர்( அது பானங்களாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ இருக்கலாம்) அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  3. அடுத்த சில வாரங்களுக்கு கிணறுகள் துப்புரவாக்கி இறைத்தல் அல்லது இயலுமான வரை நீரை வீணாக வெளியேற்றல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
  4. தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சுதல் செயற்பாட்டை பகல் பொழுதுகளில் மேற் கொள்ளாது மாலை வேளைகளில் மேற்கொள்ளுதல்.
  5. வீடுகளில் நாளாந்த பாவனைக்கு பயன்படுத்தப்படும் திறந்த கிணறுகளின் மேற்பகுதிகளை சூரிய ஒளி படாதவாறு மூடி வைத்தல். இது கிணறுகளில் பாசி வளர்வதையும் குறைக்கும்.
  6. நீரை தவறாக பயன்படுத்துவதையும் (Misuse) துஸ்பிரயோகம் செய்வதனையும் (Abuse ) தேவைக்கு மேலதிகமாக பயன்படுத்துவதனையும் (Over use) தடுத்தல்.
  7. தாவரங்களின் கிளைகளையோ, விதானங்களையோ அகற்றுவதை நிறுத்துதல்.

எனவே அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலைமையை எதிர்கொள்வதற்கு நாம் எம்மைத் தயார்ப்படுத்துவது சிறந்ததாகும்” – என்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button