அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக நாமல் – ஆதரவளிக்கும் 20 எம்.பிகள்!
எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்சவை கொண்டுவருவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழுவொன்று ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அந்தக் கட்சிக்குள் நாமல் ராஜபக்ஸவுக்கு ஆதரவான குழுவினர் பல தடவைகள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுவதாகவும், இதன்படி தற்போது வரையில் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருமளவான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கடந்த வாரங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், அவ்வாறு அவர்கள் ஆளும் கட்சி பக்கம் வந்தால் எதிரணிக்கு சென்று தாம் குழுவாக அமர்ந்து நாமல் ராஜபக்ஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சி பக்கம் செல்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித பதில்களையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.