News

அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

சிரமத்தினை எதிர்கொண்டேனும் அரச உத்தியோகத்தர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துலு குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரிச் சலுகைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது என்று கூறிய பந்துலு குணவர்தன அரச உத்தியோகத்தர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இன்றைய தினம் (25.04.2023) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமான சர்வதேச நாணய நிதியமானது, அதன் நிபந்தனைகள், யோசனைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான வழிமுறைகள் உள்ளன. எனவே அவற்றுக்குப் புறம்பாக எம்மால் செயற்பட முடியாது.

நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியைச் செலுத்தக் கூடிய திட்டமிடலைச் சமர்ப்பிப்பதாகும்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படுமிடத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வரி சலுகை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

எனினும் குறித்த ஒப்பந்தத்தின்படி செயற்பட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியுள்ளோம். இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது.

சர்வதேச மட்டத்தில் பொருளாதார ரீதியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கமைய செயற்பட வேண்டும்.

எனவே, அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்குச் சிரமத்தினை எதிர்கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button