News

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கே.எல்.ராகுல்! – அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர், கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காலில் அடிபட்ட நிலையில், பரிசோதனையில் தசைநாறு கிழிந்தது தெரிய வந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல். ராகுல் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லக்னோ அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலைவர் கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, செய்யப்பட்ட சோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் துரதிர்ஷ்டவசமாக அவரது தசைநார் கிழிந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.

இந்த இக்கட்டான நேரத்தில் ராகுலுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், மேலும் அவர் மீண்டு வருவதற்கான சிறந்த கவனிப்பை உறுதிசெய்ய அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எப்படி ஆயினும் அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ப்ளேஆஃப்களுக்குச் செல்வதற்கான உத்வேகத்தில் இருக்கும் சூழலில், ராகுல் இல்லாததை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மிகவும் தவறவிடும். ராகுல் மீண்டும் களத்தில் தனது திறமையை வெளிப்படுத்துவார், மேலும் அவர் விரைவில் திரும்புவார் என்று நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கே.எல். ராகுல் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், அடுத்த மாதம் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியாவுடன் தான் இருக்க மாட்டேன். இந்திய அணிக்கு திரும்பி அதற்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன். எப்போது அதுதான் எனது முதன்மையான குறிக்கோள் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள, உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில், கே.எல். ராகுலும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதன் மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், 274 ரன்களை சேர்த்துள்ளார். அதேநேரம், வழக்கமான அதிரடி ஆட்டமின்றி, அவர் மிகவும் நிதானமாக விளையாடியது விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button