ஊடகங்களை ரணில் விக்ரமசிங்க ஒடுக்குவதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு
ரணில் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
நேற்று (10.06.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஊடகவியலாளர்களை அடக்குவதற்கும் ஊடக நிறுவனங்களை அடக்குவதற்கும் ரணில் விக்ரமசிங்க ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
மக்கள் ஆணையில்லாமல் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சித்து விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்துள்ளார்.
தனக்கு ஏற்ற வகையில் செயற்படாத சுயாதீன ஆணைக் குழுக்களின் தலைவர்களை பதவி நீக்குவது தொடர் கதையாக உள்ள நிலையில் தற்போது ஊடகங்களில் கை வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு ஊடகங்கள் பாரிய பங்காற்றி வரும் நிலையில் ரணில் அரசாங்கம் அரசாங்கத்தின் ஊழல்கள் முறைகேடுகளை ஊடகங்கள் மக்களுக்கு அம்பலப் படுத்துவதை விரும்பாத நிலையில் குறித்த சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகளான சீன உர மோசடி , 1100 கோடி ரூபாய் பிணை முறி மோசடி, 1700 கோடி ரூபாய் சீனி மோசடி மற்றும் வெள்ளைப் பூண்டு மோசடி என பல மோசடிகளை ஊடகங்களே அம்பலப்படுத்தின.
மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடக நிறுவனங்கள் , ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்படும் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்திடம் வருகின்ற பல்வேறு மோசடிகளை அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற ஊடகங்களை அடக்க நினைப்பது மக்களின் ஜனநாயக கருத்துக்களை மறுப்பதற்கும் ஊடக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதுமாக அமையும்.
ஆகவே மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் சுபிட்சமான வாழ்வையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் மக்கள் அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பின்னால் அணி திரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.