News

ஒலிபரப்பு சேவைகள் குறித்து அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட திட்டங்கள்

ஒலிபரப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான யோசனையை அரசாங்கம் முன்மொழியவுள்ள நிலையில் அதற்கு எதிராக பல தரப்புக்களுக்கும் தமது ஆட்சேபனையை வெளியிட்டு வருகின்றன.

முன்மொழியப்படவுள்ள யோசனை தொடர்பில் இன்னும் வர்த்தமானி வெளியிடப்படவில்லை. எனினும் சட்ட வரைவாளர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட 21 பக்க வரைவு அறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, முன்மொழியப்பட்ட ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படவுள்ளது. ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு பணிப்பாளர் உட்பட்ட ஐந்து பேர் இந்த குழுவில் உள்ளடங்கியிருப்பார்கள்.

இவர்களை ஐந்து வருடக்கால சேவைக்காக ஜனாதிபதியே நியமிப்பார். இந்தநிலையில்

  1. இந்த ஆணையகம், அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை மக்களுக்கு ஒளிபரப்புச் சேவைகள் வழங்குவதை உறுதி செய்தல்.
  2. அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒலிபரப்பு சேவைகள் தொடர்பான வெளியீடு உட்பட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்தல்.
  3. ஒளிபரப்பு சேவைகளுக்கான வருடாந்த உரிமங்களை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் வழங்குதல்.
  4. மின்னணு ஒளிபரப்பு சேவைகள் அல்லது அத்தகைய நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல்.
  5. உரிமம் பெற்றவருக்கு அல்லது ஒளிபரப்பு சேவைக்கு வழங்கப்படும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  6. ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் கல்வி, அறிவு மற்றும் ஊடக கல்வியின் தரத்தை உறுதி செய்தல்.
  7. சமூகத்தின் பன்மைத்துவத்தை மதித்து ஒலிபரப்பு சேவைகளை வழங்குவதை உறுதி செய்தல்.
  8. மக்களின் சமூக மற்றும் கலாசார விழுமியங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் மக்களின் ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒளிபரப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
  9. இலக்கியம், கலை மற்றும் கலாசாரத்தை உயர் தரத்திற்குக் கொண்டுவரும் வகையில் ஒலி-ஒளி ஊடகங்களுக்கான கொள்கைகளை உருவாக்குதல்.
  10. ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் போது சிறப்புத் தேவைகளை கொண்டவர்களான பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்தல்.
  11. தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒளிபரப்புச் சேவைகளை மேற்கொள்வதை உறுதி செய்தல்.
  12. உரிமம் பெற்ற ஒளிபரப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒளிபரப்பு நிறுவனங்கள் அல்லது நபர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை முன்னெடுக்கவுள்ளது.

முன்மொழியப்பட்ட ஆணையகத்துக்கு பரந்த அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,

  1. ஒளிபரப்பு சேவை வழங்குநர்களுக்கான உரிமங்களை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்.
  2. ஒளிபரப்பு உரிமத்தைப் பெற விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டிய முன்நிபந்தனைகளைத் தீர்மானித்தல்.
  3. உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுவது தொடர்பாக முறைப்பாடுகளை பெறுதல் மற்றும் விசாரணைகளை நடத்துதல்.
  4. ஒரு ஒளிபரப்பு சேவையை வழங்குவதற்காக ஒருவர் அல்லது ஒரு ஒளிபரப்பு நிறுவனம் பெறக்கூடிய உரிமங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்.
  5. காரணங்களுடன் ஒளிபரப்பு சேவைக்காக வழங்கப்பட்ட எந்த உரிமத்தையும் இடைநிறுத்தவும் அல்லது ரத்து செய்யும் உரிமையை கொண்டிருத்தல் வேண்டும்.

இந்தநிலையில் உத்தேச ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆணையாளர்களின் பரிந்துரையின் பேரில் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுவார்.

அத்துடன் அவர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல், வணிக மேலாண்மை, சட்டம், பொறியியல், கணக்கியல், நிர்வாகம் அல்லது வெகுஜன ஊடகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் முகாமைத்துவத் துறையில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button